தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்- செல்வபெருந்தகை

Published On 2024-03-04 05:12 GMT   |   Update On 2024-03-04 05:12 GMT
  • தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
  • பா.ஜ.க. எல்லா மாநிலங்களையும் போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்காக முயற்சிக்கிறார்கள்.

தூத்துக்குடி:

தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நெல்லை, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அப்போது அவருக்கு மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மழை வெள்ளத்தை எதிர்கொள்வதற்காக தமிழக அரசு ரூ.27 ஆயிரம் கோடி நிவாரண உதவி கேட்டும், ஒரு பைசா கூட நிதி அளிக்காத பா.ஜ.க.வை தமிழக மக்கள் வரும் தேர்தலில் புறக்கணிப்பார்கள்.

இன்று தமிழகம் வரக்கூடிய பிரதமர் மோடி இந்த மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார். தமிழகத்தில் தி.மு.க.வுடன், காங்கிரஸ் நம்பிக்கையான உறவு கொண்டுள்ளது. இந்த கூட்டணி தொடரும். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

போதைப் பொருட்கள் மத்திய அரசின் உளவுத்துறை போன்ற துறைகளின் கட்டுப்பாடுகளை மீறி குஜராத், ஆந்திரா, தமிழகம் என அனைத்து பகுதிகளுக்கும் வருகிறது என்றால் இதற்கு காரணம் பா.ஜ.க. தான். பா.ஜ.க. எல்லா மாநிலங்களையும் போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்காக முயற்சிக்கிறார்கள்.

பாரதிய ஜனதா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று கூறியது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்தது. எந்த வாக்குறுதியும் செயல்படுத்தவில்லை. ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகத்திற்கு உள்ள நிதியை ஒதுக்கீடு செய்யாதது ஏன்?.

ஊழலில் திளைத்துள்ள பா.ஜ.க.வினர் ஊழலைப் பற்றி பேச அருகதை இல்லாத கட்சி. எனவே பா.ஜ.க. அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நாங்கள் தி.மு.க. கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் சுமூகமாக இருக்கிறோம். அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம். நாங்கள் 5 தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம். தி.மு.க.- காங்கிரஸ் உறவு நம்பிக்கையான உறவாக இருக்கிறது. எங்களை ஒருபோதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறைத்து மதிப்பிட மாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது விஜயதாரணி பா.ஜ.க.வில் சேர்ந்தது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரே தோல்வி பயத்தில் ஓட்டம் பிடிக்கிறார். இவர் போய் அங்கே என்ன பண்ணப் போகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றார்.

Tags:    

Similar News