தமிழ்நாடு (Tamil Nadu)

கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்- ராமதாஸ்

Published On 2022-09-01 10:51 GMT   |   Update On 2022-09-01 10:51 GMT
  • கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்க்கலாம் என்ற யோசனை எழுப்பப்பட்டபோது, அதை எதிர்த்து தமிழகத்திலிருந்து முதல் குரலை எழுப்பியது நான் தான்.
  • மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு அமைப்புகள் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்ததால், வல்லுனர் குழு பரிந்துரை மீது முடிவெடுப்பதை மத்திய அரசு முதலில் கிடப்பில் போட்டது; பின்னர் நிராகரித்து விட்டது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய அளவில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பு இன்று வரை உயர்த்தப்படவில்லை.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உயர்கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான இந்த நடவடிக்கையை மத்திய அரசு தாமதப்படுத்துவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்க்கலாம் என்ற யோசனை எழுப்பப்பட்டபோது, அதை எதிர்த்து தமிழகத்திலிருந்து முதல் குரலை எழுப்பியது நான் தான்.

அதன்பின் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு அமைப்புகள் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்ததால், வல்லுனர் குழு பரிந்துரை மீது முடிவெடுப்பதை மத்திய அரசு முதலில் கிடப்பில் போட்டது; பின்னர் நிராகரித்து விட்டது.

அதனால், கிரீமிலேயர் வருமான வரம்பை இப்போது உயர்த்துவதற்கு எந்தத் தடையும் கிடையாது. எனவே, 2020-ம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சேர்த்து கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும்.

அதன்மூலம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூகநீதியை மத்திய அரசு காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News