27 மீனவர்கள், படகுகளை விடுவிக்க கோரி ராமேசுவரத்தில் 1-ந்தேதி ரெயில் மறியல்
- மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
- வருகிற 27-ந்தேதிக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதோடு, அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதில், 3,500 மீனவர்கள் மற்றும் சார் தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். முழுமையாக மீன்பிடி தொழிலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது. ஆனால் அடிக்கடி சிங்கள கடற்படையினரால் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படுவதால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து கடந்த 14-ந்தேதி காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 27 மீனவர்கள் மற்றும் அவர்களின் 5 விசைப்படகுகளை எல்லை தண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முதல் தொடங்கியுள்ளனர்.
இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. இதனால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான இறால் மற்றும் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை (18-ந்தேதி) பாம்பன் சாலை பாலத்தில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இதற்கிடையே நேற்று ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதேபோல் வருகிற 27-ந்தேதிக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதோடு, அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் நவம்பர் 1-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும், அதுவரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.