மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
- விசைப்படகு மீனவர்கள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர்.
- உண்ணாவிரதம் நடைபெறும் பகுதியில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற போது 10 விசைப்படகுகள் 64 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 64 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் ரெயில் மறியல் போராட்டம் அறிவித்த நிலையில் கலெக்டர் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி வேலை நிறுத்தம் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து கடந்த 4-ந்தேதி முதல் மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்ககோரி இன்று தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை தங்கச்சிமடம் வலசைதெரு பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. மீனவர் சங்கத்தலைவர் ஜேசுராஜா தலைமை தாங்கினார். தலைவர்கள் சகாயம், எமரிட், ஆல்வின் சைமன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மோட்சம், மெல்டன், பீட்டர், சாம்சன், தங்கச்சிமடம் வர்த்தக சங்க நிர்வாகிகள் சம்சுதீன், வல்லப கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விசைப்படகு மீனவர்கள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர். அப்போது அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இன்று தொடங்கியுள்ள உண்ணாவிரத போராட்டம் நாளையும் நடைபெறுகிறது. இதையொட்டி உண்ணாவிரதம் நடைபெறும் பகுதியில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.