துறைமுக அலுவலகத்தில் ராமேசுவரம் மீனவர்கள் திடீர் முற்றுகை போராட்டம்
- துறைமுக கடலோர பகுதிகளில் இருந்து அந்த படகுகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் துறைமுக பகுதியில் கடந்த சில வாரங்களாக விதிகளுக்கு முரணாக அதிக நீளமும், அகலமும் கொண்ட 24 பைபர் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டன. இதற்கு அந்தப்பகுதியை சேர்ந்த மற்ற மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தந்பட்ட 24 பைபர் படகுகளின் உரிமையாளர்களை அழைத்து இந்தப்பகுதியில் மீன்பிடிக்க அனுமதியில்லை. உடனே படகுகளை எடுத்துச்செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் படகுகளை எடுத்துச்செல்லாமல் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து 24 படகுகளுக்கும் அதிகாரிகள் தலா ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, துறைமுக கடலோர பகுதிகளில் இருந்து அந்த படகுகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டனர்.
இதனை கண்டித்தும், அபராதத்தை ரத்து செய்து மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரியும் 24 படகு உரிமையாளர்களும், அதில் மீன்பிடிக்கும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்களும் ராமேசுவரம் துறைமுக அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.