தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பது ஏன்? ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

Published On 2024-06-17 09:08 GMT   |   Update On 2024-06-17 09:08 GMT
  • தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கக்கூடிய அந்த வரலாற்று வாய்ப்பை தமிழக மக்கள் தந்தார்கள்.
  • அ.தி.மு.க.வுக்கு கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு சதவீதம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.

மதுரை:

மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

52 ஆண்டுகள் மிகப்பெரிய வரலாறு கொண்ட மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கம், முதல் ஆளாக நின்று மக்கள் தொண்டாற்றிய இயக்கம் என்றால் அது அ.தி.மு.க. தான்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சாதகமாக நடைபெறாது என்று புறக்கணித்த காரணத்தை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக அறிக்கையில் கூறியுள்ளார். நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 21 சதவீதம் வாக்குகளை பெற்று தனது செல்வாக்கை நிலைநிறுத்தி காட்டியுள்ளார்.

விக்கிரவாண்டி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறாது என்ற அடிப்படையில் அதற்கு ஈரோடு கிழக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இந்த இடைத்தேர்தலால் எந்த மாற்றம் ஏற்படாது, ஆனால் ஒரு பிரதான எதிர்க்கட்சி ஏன் புறக்கணிக்கிறது என்று மக்கள் விவாதிக்கிறபோது இப்போது தி.மு.க. தேர்தலை அணுகுகிற படைபலம், பணபலம், அதிகார பலம் என்பதை தெளிவாக சொல்லி உள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டில் ஜெயலலிதா இளையான் குடி, கம்பம், தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட ஐந்து தொகுதி இடைத்தேர்தலிலும், அதே ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து, 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அம்மா மாபெரும் வெற்றி பெற்று, தி.மு.க.வை எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையை உருவாக்கினார்.

அன்றைக்கு கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். அந்த அளவுக்கு மக்கள் தீர்ப்பளித்தனர். தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கக்கூடிய அந்த வரலாற்று வாய்ப்பை தமிழக மக்கள் தந்தார்கள்.

மக்களை சுதந்திரமாக வாக்களிப்பதற்கு தடையாக தி.மு.க. அரசு தேர்தல் ஆணையத்தினுடைய கட்டுப்பாடுகளை மீறி, வரம்பு மீறி செயல்படுவார்கள் என்கிற செய்தியை மக்களுக்கு சொல்லுகிற முடிவை அறிவித்த உடனே எங்கள் கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க.வும் புறக்கணித்துள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியை வெல்லுவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருப்பது அவர்கள் தொண்டர்களை ஊக்கப்படுத்த தான் பேசி உள்ளார். அது பகல் கனவு, அது நிச்சயமாக ஒரு நாளும் நடக்காது. மக்கள் தி.மு.க.வுக்கு அது போன்ற ஆதரவு நிலையை எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை.

அ.தி.மு.க.வுக்கு கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு சதவீதம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இந்த தேர்தலில் 20 சதவீதம் மேற்பட்ட வாக்கு வங்கி அ.தி.மு.க. பெற்றுள்ளது. அதேபோல் பா.ஜ.க. 11 சதவீதம், நாம் தமிழர் 8 சதவீதம் என்று தி.மு.க.விற்கு எதிராக 39 சதவீதம் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்கிற கட்சிகளை வரவேற்பதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். மக்கள் உரிமையை மீட்க, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, தேர்தல் வியூகம் அமைத்து எடப்பாடி பழனிசாமி செயல்படுத்துவார், தமிழ்நாட்டு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள்.

52 ஆண்டுகளாக சேவை செய்து வரும் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட பல சக்திகள் இன்றைக்கு முயற்சிகள் எடுத்தாலும் கூட, அந்த முயற்சிகளை எல்லாம் முறியடித்து மன உறுதியோடு இன்றைக்கு அம்மாவின் வழியிலே மீட்டெடுத்து ஒரு ஜனநாயக இயக்கமாக, சுதந்திர இயக்கமாக கடைக்கோடி ஏழை, எளிய சாமானிய தொண்டர்களின் இயக்கமாக எடப்பாடி பழனிசாமி வழி நடத்தி வருகின்றார்.

எங்களை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலே முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை களத்தில் நிறுத்தி நாங்கள் தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்புகளை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக தருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News