தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க தொடர்ந்து கெஞ்சும் துரோகிகள்- ஓ.பி.எஸ்., தினகரன் மீது ஆர்.பி.உதயகுமார் தாக்கு

Published On 2024-10-18 04:52 GMT   |   Update On 2024-10-18 04:52 GMT
  • அவர்கள் செய்த பாவத்திற்கு அடுத்த ஜென்மம் அல்ல இந்த ஜென்மத்திலேயே அனுபவிப்பார்கள்.
  • துரோகம் செய்தவர்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

மதுரை:

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 53-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூரில் அமைந்துள்ள ஜெயலலிதா கோவிலில் பொதுக்கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதிகளை போல் உழைத்திருந்தால் 10 ஆண்டுகள் உறங்கிக் கொண்டு இருந்த தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்காது. இப்போது தி.மு.க.வினர் எழுந்து நிற்பதற்கு யார் காரணம்? அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்களால் தான் இந்த நிலை ஏற்பட்டது.

இந்த துரோகத்தை தெய்வங்களாக இருக்கும் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். துரோகம் செய்தவர்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்களை தண்டிக்கவும் தேவையில்லை. அதை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் விட்டு விட வேண்டும். அவர்கள் செய்த பாவத்திற்கு அடுத்த ஜென்மம் அல்ல இந்த ஜென்மத்திலேயே அனுபவிப்பார்கள்.

43 தொகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் நாம் தோற்று ஆட்சியை இழந்தோம். எடப்பாடியார் தலைமையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசு அமைய முடியாமல் போனதற்கு காரணமானவர்கள் இன்று கட்சி வேட்டி கூட அணிய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

கட்சியிலிருந்து வெளியே செல்லாதீர்கள் என்று சொன்னபோது எல்லாம் என்னை அங்கே கூப்பிடுகிறார்கள், இங்கே கூப்பிடுகிறார்கள், தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று சொன்னவர்கள் இன்று கட்சியிலே சேர்த்துக் கொள்ளுங்கள், சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். இதற்கு யார் பொறுப்பு, அவர்களே தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News