தமிழ்நாடு

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு... செங்கல்பட்டு மாணவி முதலிடம்

Published On 2024-07-10 05:13 GMT   |   Update On 2024-07-10 05:19 GMT
  • தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார்.
  • தரவரிசைப் பட்டியல் tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2024-25-ம் கல்வியாண்டில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6-ந்தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஜூன்) 6-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. பின்னர், மேலும் அவகாசம் கேட்டு வந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கடந்த மாதம் 10 மற்றும் 11-ந்தேதிகளில் விண்ணப்பப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்ததாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்தது.

விண்ணப்பப் பதிவு செய்தவர்களில், 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியும், அவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 853 பேர் சான்றிதழ்களை பதிவேற்றமும் செய்து இருந்தனர்.

இந்த நிலையில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண்ணும் கடந்த மாதம் 12-ந்தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 13-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணைப்படி, விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார்.

தரவரிசைப் பட்டியல் tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலில் செங்கல்பட்டை சேர்ந்த மாணவி தோஷிதா லட்சுமி முதலிடம் பெற்றுள்ளார். நெல்லையை சேர்ந்த மாணவி நிலஞ்சனா 2-வது இடம் பெற்றுள்ளார். முதல் 2 இடங்களை மாணவிகள் பெற்ற நிலையில் நாமக்கலை சேர்ந்த கோகுல் என்ற மாணவன் 3-வது இடம்பெற்றுள்ளார்.

வரும் 22-ந்தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது.

Tags:    

Similar News