தமிழ்நாடு (Tamil Nadu)

போடிமெட்டு, குமுளி மலைச்சாலையில் போக்குவரத்துக்கு தடை

Published On 2023-12-18 05:06 GMT   |   Update On 2023-12-18 05:07 GMT
  • முந்தல் சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன.
  • மலைச்சாலையில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலசொக்கநாதபுரம்:

தமிழகத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி மலைச்சாலை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் போடிமெட்டு, குமுளி மலைச்சாலை வழியாக சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.

போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. போடிமெட்டு மலைச்சாலையில் 8 மற்றும் 11ம் கொண்டைஊசி வளைவுகளில் பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. இதை அகற்றாமல் போக்குவரத்திற்கு மட்டும் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மேலும் மண்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதும் மறிக்கப்பட்டது. மேலும் ராட்சதபாறைகளும் சாலைகளில் உருண்டன. இதனை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு 10 மணிமுதல் போடிமெட்டு மலைச்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவின் உமேஷ்டோங்கரே அறிவித்தார்.

மேலும் முந்தல் சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் கேரளாவுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் உள்பட அனைத்து வாகனங்களும் அடிவாரத்திலேயே நிறுத்தப்பட்டது. ஜே.சி.பி. எந்திரங்களுடன் மலைச்சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பின்னர் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் குமுளி மலைச்சாலையில் மாதா கோவில் அருகே கொண்டைஊசி வளைவு பகுதியில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன. குமுளி தமிழக சோதனை சாவடி அருகே மரம் மற்றும் பாறைகள் உருண்டன. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் மற்றும் கூடலூர் வனச்சரகர் முரளிதரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று ஜே.சி.பி எந்திரம் மூலம் மரங்கள் மற்றும் பாறைகளை அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து இன்று காலை முதல் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இருந்தபோதும் மலைச்சாலையில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News