தமிழ்நாடு

சென்னையில் 1½ ஆண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.43 கோடி அபராதம் வசூல்

Published On 2023-05-27 07:17 GMT   |   Update On 2023-05-27 07:17 GMT
  • மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
  • கடந்த ஆண்டு சென்னை மாநகரம் முழுவதும் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 28 ஆயிரத்து 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

சென்னை:

மது போதையில் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்காக அதற்கான அபராத தொகை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இந்த வகையில் கடந்த ஆண்டு சென்னை மாநகரம் முழுவதும் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 28 ஆயிரத்து 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக ரூ. 28 கோடியே 2 லட்சத்து 80 ஆயிரம் கடந்த ஆண்டு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த 24-ந்தேதி வரை 15 ஆயிரத்து 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரூ.15 கோடியே 23 லட்சத்து 10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.43 கோடியே 25 லட்சத்து 40 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

இது போன்று அபராதம் விதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 50 சதவீதம் அளவுக்கு அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அபராதம் விதிக்கப்பட்ட 28 ஆயிரத்து 23 வழக்குகளில் 13 ஆயிரத்து 35 பேர் மட்டுமே அபராத தொகையை செலுத்தி உள்ளனர்.

இவர்களிடம் இருந்து 13 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 15 ஆயிரத்து 231 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் 3 ஆயிரத்து 527 பேர் மட்டுமே ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ. 3 கோடியே 52 லட்சத்து 70 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த 1 ஆண்டில் போதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து 16 கோடியே 56 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டாமல் காலம் தாழ்த்தி வரும் நபர்களிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களை போனில் அழைத்து அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News