சென்னை மழையால் மிகப்பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது: சரத்குமார்
- சென்னை உள்ளிட்ட பகுதிகளில் குறை கூறவில்லை என்றாலும் நிறைவாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
- தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் பல்வேறு கொலைகள் நடந்திருக்கிறது. மிகவும் வேதனையாக இருக்கிறது.
தூத்துக்குடி:
சமத்துவ மக்கள் கட்சி பாராளுமன்ற, சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் பாளையில் இன்று மாலை நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் இன்று மதியம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவருக்கு விமான நிலைய வாசலில் தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பொறுப்பாளர்களை அறிவிப்பதற்காக இங்கு வந்து இருக்கிறேன்.
மழையால் சென்னையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் முழுமையான அடிப்படையான வசதிகளை செய்ய முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறோம். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் குறை கூறவில்லை என்றாலும் நிறைவாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஒருவரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலும், மேலும் வீட்டை விட்டு வெளியே போக முடியாத நிலை உள்ளது. தொலைதொடர்பு துண்டிப்பு, மின்சார துண்டிப்பால் மிகப்பெரிய பாதிப்பு மற்றும் இழப்பை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற நிலைமை தொடர்ந்து வராமல் எப்படி தடுக்க வேண்டும் என கண்டறிந்து அரசு அதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் மீட்புக்காக மிகப்பெரிய படையை உருவாக்க வேண்டும் என அறிக்கை கொடுத்திருக்கிறேன்.
மக்களின் வேதனை எங்களுக்கு புரிகிறது. ஆனால் வேதனையிலும் அதனை சகித்துக் கொண்டு எதிர்ப்புகளை தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த எதிர்ப்பை தேர்தல் களத்தில் காண்பிக்க மாட்டார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்க கூடிய அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பில்லை. தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் பல்வேறு கொலைகள் நடந்திருக்கிறது. மிகவும் வேதனையாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் தொழில் வளத்தை உருவாக்க வேண்டும். வேலையில்லா திண்டாட்டமே இதற்கு காரணமாக அமைகிறது. இதனை தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.