நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கும் 20 பெண் வேட்பாளர்கள்
- வருகிற பாராளுமன்ற தேர்தலையும் சீமான் தனித்தே சந்திக்க முடிவு செய்து இருக்கிறார்.
- வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்டுள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதி பங்கீடு என முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல பதட்டம் இன்றி தனியாகவே தேர்தல் களத்தை சந்திக்க தயாராகி வருகிறது.
நாம் தமிழர் கட்சி இது வரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டுள்ளது. சட்டமன்ற, பாராளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் கணிசமான வாக்கு சதவீதத்தை அந்த கட்சி தொடர்ந்து பெற்று வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலையும் சீமான் தனித்தே சந்திக்க முடிவு செய்து இருக்கிறார்.
இதன்படி வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை நிரூபிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்களை களம் இறக்க சீமான் முடிவு செய்துள்ளார். இதற்கான வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 3 வேட்பாளர்கள் நாம் தமிழர் கட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி நெல்லை, கன்னியாகுமரியில் பெண் வேட்பாளர்கள் களமிறங்கும் நிலையில் தென்சென்னை தொகுதிக்கும் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென்சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியை தமிழ்ச் செல்வி போட்டியிடுகிறார். இந்த 3 வேட்பாளர்களை தவிர மேலும் 17 பெண் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விரைவில் அறிவிக்க உள்ளார். மீதம் உள்ள 20 தொகுதிகளிலும் ஆண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். அவர்களை தேர்வு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தல் களத்தில் இந்த முறை நாம் தமிழர் கட்சி தங்களது வாக்கு சதவீதத்தை அதிக அளவில் உயர்த்தி காட்டும் என்று அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "தொடர்ந்து தனித்து போட்டியிட்டு வருவதே நாம் தமிழர் கட்சியின் தனித் தன்மையாக இருந்து வருகிறது. படிப்படியாக எங்களது ஓட்டு சதவீதமும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த தேர்தலில் நிச்சயம் அரசியல் களத்தில் ஆச்சரியப்படும் அளவுக்கு எங்களது வாக்கு சதவீதம் கூடியிருக்கும். அதற்கு ஏற்ப வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்டுள்ளார்.
தமிழக மக்களும் நாங்கள் தனித்து போட்டியிடுவதையே தொடர்ந்து விரும்புகிறார்கள். அதனாலயே எங்களது வாக்கு சதவீதம் உயர்ந்து வருகிறது" என்று தெரிவித்தார்.
இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் நாங்கள் திராவிட கட்சிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் கடும் சவாலை அளிப்போம் என்றும் அவர் கூறினார்.