தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது- செல்வப் பெருந்தகை
- போதைப் பொருட்கள் நாடு கடந்து இந்தியாவுக்குள் நுழைகிறது. இதை யார் தடுக்க வேண்டும்.
- தமிழ்நாட்டு காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடா நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தியாகத்தின் திருஉருவமாய் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சுந்தரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு காங்கிரஸ் சார்பில் வீரவணக்கத்தை செலுத்தி உள்ளோம். பிரிட்டிஷ்காரர்களை விரட்டி அடித்த பெருமை தீரன் சின்னமலைக்கு உண்டு. ஆனாலும் பிரிட்டிஷ்காரர்களால் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வேங்கை, தீப்பொறி இந்த மண்ணிலிருந்து பிறந்தது. இது போன்ற தலைவர்கள் வாங்கி கொடுத்த இந்த சுதந்திரத்தை இன்று கேலிக்கூத்தாக்கியுள்ளது பாசிச சக்திகள். சுதந்திரத்துக்காகவும், இந்த மண்ணுக்காகவும் போராடியவர் தீரன் சின்னமலை. அவரை எப்படி பிரிட்டிஷ்காரர்கள் பலி வாங்கினார்களோ அதே போல் பிரிட்டிஷ் ஏகாதிபதியத்தை எதிர்த்தவர்களையும் அவர்கள் பலி வாங்கினர். அவரைப் போன்று இப்பவும் சுதந்திரத்துக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் ராகுல் காந்தி குரல் கொடுத்து வருகிறார். அவர் மீது உண்மைக்கு புறம்பான பொய்யான வழக்குகள் போடப்படும் நிலை இந்த மண்ணில் நிகழ்ந்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
சட்ட ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை. போதைப்பொருட்கள் எங்கிருந்து வருகிறது. போதைப் பொருட்கள் நாடு கடந்து இந்தியாவுக்குள் நுழைகிறது. இதை யார் தடுக்க வேண்டும். பா.ஜ.க அரசிடம் தான் ராணுவ அமைப்பு, விமானம், கடற்படை, பிரிவு என பல்வேறு அமைப்புகள் இருக்கு. அவர்களால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை. குஜராத் தான் போதை பிறப்பிடம் என்று சொல்கிறார்கள். அங்கிருந்துதான் தமிழ்நாடு பல்வேறு இடங்களுக்கு செல்கிறது என்று சொல்கிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. போதைப் பொருள் கலாச்சாரம் எங்கு ஆரம்பிக்கிறது என்று பார்க்க வேண்டும். குஜராத்தில் ஒரு தொழிற்சாலையில் பிடித்திருக்கிறார்கள். அங்கு கட்டுப்படுத்தினாலே தமிழ்நாட்டுக்குள் போதைப் பொருட்கள் வராது என ஆய்வாளர்கள் கட்டுரை எழுதி உள்ளனர்.
அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிபுணர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்து செல்வப்பெருத்தகை கூறும் போது, நாங்கள் எல்லாம் பாதுகாப்பாக தான் இருக்கிறோம். தமிழ்நாட்டு காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது. கொலை வழக்கில் புலன் விசாரணை நடந்து வருகிறது. தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு 10 வருடங்கள் ஆகிறது. பத்தாண்டுகள் ஆகிறது யாரையும் கண்டுபிடிக்கவில்லை. அப்போது அவங்க ஆட்சி தானே நடந்தது.
கொலை வழக்கில் கண்டபடி யாரையும் பிடித்து சிறையில் அடைக்க முடியாது. தீவிர புலன் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும். இப்பொழுது எங்களது மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு ஆகட்டும் சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி அன்பு என்னிடம் எல்லா விவரத்தையும் கூறியுள்ளார். ஏறக்குறைய குற்றவாளி அருகே நெருங்கி விட்டார்கள். கொலை வழக்குகளை எடுத்தும் கவுத்தோம் என்று செய்துவிட முடியாது. புலன் விசாரணை அடிப்படையில் உண்மையான குற்றவாளியை வெளியே கொண்டு வர வேண்டும்.
விசாரணை நடந்து வருகிறது. கண்டிப்பாக உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள். தி.மு.க.வுடன் இந்திய கூட்டணி வலிமையாக உள்ளது நாங்கள் யாரிடமும் செல்ல வேண்டியதில்லை. நாங்கள் நேர்மையாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த ஒரு பாரபட்சமும் கிடையாது. தி.மு.க. தலைமையில் இந்திய கூட்டணி தமிழ்நாட்டில் வலிமையாக உள்ளது. எங்கள் கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது. கார்த்திக் சிதம்பரம் ஆகட்டும், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகட்டும், நான் ஆகட்டும் கூட்டணி குறித்து நாங்கள் தீர்மானிக்க முடியாது அகில இந்திய தலைமை தான் தீர்மானிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.