தமிழ்நாடு

விஜயகாந்துக்கு தொண்டையில் சிறிய ஆபரேஷன்?

Published On 2023-12-02 08:02 GMT   |   Update On 2023-12-02 09:41 GMT
  • விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • விஜயகாந்துக்கு கடந்த 14 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 18-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அவரது மார்பில் அதிக அளவு சளி தேங்கியதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளியை அகற்றுவதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் பின்னர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆஸ்பத்திரி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயகாந்தின் உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு நுரையீரல் தொற்று தொடர்பான சிகிச்சை தேவைப்படுவதால் 2 வாரங்களுக்கு ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியது உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூச்சு விடுவதற்கு விஜயகாந்த் சிரமப்பட்டு வருவதால் அவருக்கு மூக்கு வழியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் அதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் இன்று தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் விஜயகாந்துக்கு தொண்டையில் சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொண்டையில் சிறிய குழாயை பொருத்தி அதன் மூலமாகவே அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக ஆஸ்பத்திரி சார்பில் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் சீராக மூச்சு விடுவதற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நந்தம்பாக்கம் மியாட் ஆஸ்பத்திரியில் விஜயகாந்துக்கு கடந்த 14 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News