தமிழ்நாடு

மீனவர்களை தாக்கி ரூ.1 லட்சம் பொருட்கள் கொள்ளை- இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம்

Published On 2023-11-04 05:41 GMT   |   Update On 2023-11-04 09:10 GMT
  • மீனவர்கள் செந்தில்குமார், மதன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.
  • வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், மதன், சிவகுமார், நித்தியகுமார். இவர்கள் 4 பேரும் நேற்று இரவு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இன்று அதிகாலை நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு படகில் வந்த 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென மீனவர்கள் படகில் ஏறி 4 பேரையும் கத்தியை காட்டி பொருட்களை கொடுக்குமாறு மிரட்டினர். அதற்கு மீனவர்கள் கொடுக்க மறுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் 4 பேரையும் மூங்கில் கட்டையால் சரமாரியாக தாக்கி மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ் கருவிகள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புடைய மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் செந்தில்குமார், மதன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களை சக மீனவர்கள் மீட்டு வேகவேகமாக கரைக்கு திரும்பினர். பின்னர் 2 பேரையும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் அடிக்கடி தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவது மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News