நகை கடை போல் ஜொலிக்கிறது: நரிக்குறவர்களின் கடையில் வளையல்-செயின் விற்பனை அமோகம்
- ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் நரிக்குறவர்களால் நடத்தும் கடையும் ஒதுக்கப்பட்டது.
- நறிக்குறவர் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் வணிக மையம் என்று பெயரிடப்பட்ட இந்த கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி காணப்படும் நரிக்குறவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குழுவாக தங்கி உள்ளனர். அவர்கள் தாங்கள் செய்யும் பாசிமணி,வளையல், செயின் உளிட்ட பொருட்களை சாலை ஓரங்கள், திருவிழாகள், பஸ் நிலையம் போன்ற இடங்களில் விற்பனை செய்வது வழக்கம்.
இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆரத்தியின் முயற்சியால் நரிக்குறவர்களின் பொருட்களை விற்பனை செய்யவும், அதனை அனைத்து இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லவும் முயற்சி எடுத்து உள்ளார்.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ரீட்ஸ் என்ற தொண்டு நிறுவனம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் மூலம் மணிமாலை கோர்த்தல், பட்டுநூலில் தயாரித்த வளையல், கவரிங் நகைகள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்கள் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பொருட்களை விற்பனை செய்யும் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் நரிக்குறவர்களால் நடத்தும் கடையும் ஒதுக்கப்பட்டது. இதனை நேற்று முன்தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நறிக்குறவர் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் வணிக மையம் என்று பெயரிடப்பட்ட இந்த கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
நகை கடைபோல் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் இந்த கடையில் புதிய மாடல்களில் மனதுக்கு பிடித்த வளையல், செயின்கள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த பொருட்கள் தரமானதாக பிராண்ட் நிறுவனம் போலவே காட்சி அளிக்கிறது.
இந்த மையத்தில் பணியில் உள்ள நரிக்குற பெண்கள் கோட் அணிந்து புதிய தோற்றத்தில் விற்பனை செய்கிறார்கள். இதுவும் பொதுமக்களை மிகவும் கவர்ந்து உள்ளது.
இதன் மூலம் கலெக்டர் ஆர்த்தியின் முயற்சியால் நரிக்குறவர்களின் பொருட்களுக்கு புதி பிராண்ட் உருவாகி இருக்கிறது. இதனால தங்களது வாழ்வாதாரம் உயரும் என்று நரிக்குறவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கடையில் மட்டும் அல்லாமல் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான பட்டுசேலை கடைகளிலும் நரிக்குறவர்களின் உற்பத்தி பொருட்களை காட்சிபடுத்தி விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முழுக்க, முழுக்க பட்டு நூலில் செய்யப்படும் அணிகலன்கள் என்பதால்பட்டுச்சேலை வாங்குபவர்கள் இதனையும் வாங்குவார்கள் என்றனர்.