12 அடி பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பள்ளி பஸ்
- பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
- பஸ்சில் இருந்த மாணவர்களில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சூலூர்:
கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நடுபாளையம், பீடம்பள்ளி, பாப்பம்பட்டி பகுதிகளில் உள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக பஸ் ஒன்று சென்றது.
பஸ்சை கார்த்திக் என்பவர் ஓட்டினார். நடுப்பாளையம், பீடம்பள்ளி, பாப்பம்பட்டி பகுதிகளில் உள்ள மாணவர்களை ஏற்றி விட்டு, பட்டணம் ஜே.ஜே.நகர் பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றுவதற்காக கார்த்திக் பஸ்சை அங்கு ஓட்டி சென்றார்.
அப்போது ஜே.ஜே.நகர் பகுதி அருகே சென்ற போது, எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. சாலையின் ஒரு புறத்தில் பள்ளம் இருந்ததால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர், வேனில் மீது மோதுவது போல் வந்ததாக தெரிகிறது.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியான பஸ் டிரைவர் கார்த்திக், மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையின் ஒரத்தில் இருந்த 12 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் கார்த்திக் மற்றும் பஸ்சில் இருந்த மாணவர்களில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
பஸ் விபத்துக்குள்ளானதை அறிந்ததும், ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, பள்ளத்தில் இருந்த பஸ்சை கிரேன் உதவியுடன் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். தொடர்ந்து விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, கடந்த 9 வருடமாகவே இந்த சாலை இப்படி தான் உள்ளது. இதனை சீரமைத்து தருமாறு கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலத்தில் இந்த சாலை வழியாக செல்ல முடியாத நிலையே உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சாலையை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.