தமிழ்நாடு

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் கருப்பு மையால் அழிக்க வந்துவிடுவோம்- ராமதாஸ் பரபரப்பு பேச்சு

Published On 2023-02-28 06:15 GMT   |   Update On 2023-02-28 06:15 GMT
  • இந்தியாவில் மட்டும் 880 மொழிகள் பயன்பாட்டில் இருக்கிறது.
  • இந்திய அளவில் 220 மொழிகள் அழிந்து விட்டதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

திருச்சி:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை நடத்தி வருகிறார். இந்த பயணம் கடந்த 21-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழன்னை சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தியுடன் தொடங்கியது.

இந்தப் பயணம் மேல் மருவத்தூர், புதுச்சேரி, சிதம்பரம், தஞ்சாவூர் வழியாக திருச்சி வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். இதில் பா.ம.க. நிறுவனரும், பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகில் 7,015 மொழிகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 880 மொழிகள் பயன்பாட்டில் இருக்கிறது. உலகில் 2,000 மொழிகளை ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் தான் பேசுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இந்திய அளவில் 220 மொழிகள் அழிந்து விட்டதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த நிலையில் நூறு ஆண்டுகளில் அழிந்து விடும் வாய்ப்பு உள்ள மொழிகளில் தமிழ் 8-வது இடத்தில் உள்ளதாக ஒரு கூட்டம் அவதூறு பரப்புகிறது. ஆனால் அது போன்ற ஒரு தகவலை யுனெஸ்கோ அமைப்பு வெளியிடவில்லை. உலகில் ஆங்கிலம், இந்தி, ரஷ்யா உள்ளிட்ட 13 மொழிகள் தான் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசுகிறார்கள். அந்த 13 மொழிகளில் தமிழ் இடம் பெறவில்லை.

ஆனால் உலகம் முழுவதும் தமிழர்களின் எண்ணிக்கை 10 கோடி பேர் வரை இருக்கும். அழிவில் இருந்து தமிழ் மொழியை மீட்க இனிமேல் அனைவரும் தமிழில் பேச வேண்டும். தமிழில் பேசாதவர்களையும் பேச வைக்க வேண்டும்.

திருச்சி மாவட்ட வணிகர்கள் தங்களது கடைகளுக்கு முன்பு தமிழில் பெயர் பலகை வைத்தால் அடுத்த முறை நான் திருச்சிக்கு வரும்போது அந்த வணிகர்களுக்கு மலர் கொத்து வழங்குவேன். தமிழக வணிகர்கள் கடைகளில் முன்பு பெயர் பலகையை தமிழில் எழுதுங்கள்.

அப்படி இல்லை என்றால் ஒரு திங்கள் இடைவெளி விட்டு அழிப்பதற்காக தமிழகம் முழுவதும் நாங்கள் கருப்பு மை கலந்த வாளி மற்றும் ஏணியை தூக்கிக் கொண்டு வந்து விடுவோம். எங்களை அந்த நிலைக்கு தள்ளி விடாதீர்கள். ஏனென்றால் தமிழை காக்க எங்களுக்கும் வேறு வழி இல்லை. ஆனால் வேறு எந்த மொழிகளுக்கும் நாங்கள் எதிரி கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பாவாணர் தமிழ் இயக்க அமைப்பாளர் திருமாறன், உலக திருக்குறள் பேரவை துணைத் தலைவர் முருகானந்தம், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் ஜவகர் ஆறுமுகம், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள் மா.பிரின்ஸ், உமாநாத், திலீப் மற்றும் திரளான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News