குடிநீர் பாட்டிலில் அடைத்து சாராயம் விற்ற வாலிபர்
- போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- 60 பிளாஸ்டிக் சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
சேலம்:
தமிழக அரசு கள்ளச்சாராயத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் அதையும் மீறி மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயத்தை காய்ச்சி அருகில் உள்ள கிராமங்களில் சிலர் விற்பனை செய்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர், கல்வராயன் மலை பகுதியில் போலீசார் கண்காணிப்பையும் மீறி கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. இந்த கள்ளச்சாராயம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் மலை கிராமங்களில் விற்கப்பட்டு வருகிறது. அதனை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம், செல்லியம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் குடிநீர் போன்று ½ லிட்டர் அளவு கொண்ட குடிநீர் பாட்டில்களில் சாராயத்தை அடைத்து வைத்து விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. மேலும் ஆத்தூர் டவுன் போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் ½ லிட்டர் தண்ணீர் பாட்டிலில் சாராயத்தை அடைத்து குடிநீர் போல விற்பனை செய்த செல்லியம்பாளையத்தை சேர்ந்த சதீஷ் (29) என்ற வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவரிடம் இருந்து 60 பிளாஸ்டிக் சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 6 மாத காலமாக இதே போல விற்பனை செய்து செய்து வந்ததும், பொது மக்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க குடிநீர் பாட்டிலில் அடைத்து சாராயம் விற்பனை செய்ததாகவும், ½ லிட்டர் சாராயத்தை 100 ரூபாய்க்கு விற்பனை செய்ததும், இதை வாங்கியவர்கள் அந்த பகுதியில் நின்றே குடிநீர் போல சாராயத்தை குடித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.