தமிழ்நாடு

எந்த பலனும் இல்லை என்ற தமிழிசைக்கு தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி

Published On 2024-06-08 05:47 GMT   |   Update On 2024-06-08 05:47 GMT
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கியிருக்கிறார்.
  • தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது; மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது...

சென்னை:

முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் இன்று காலையில் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் பா.ஜ.க. அதிகமாக வாக்குகள் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இடங்கள் கிடைக்கவில்லை என்பதை எல்லா தொண்டர்களையும் போலவே கவலையாக பார்க்கிறேன். எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை விட, எந்த பலனும் இல்லாமல் காங்கிரசுக்கும், திமுகவிற்கும் அதிக இடம் கிடைத்திருக்கிறது என்பதுதான் கவலை என கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...

அப்படியில்லை...

1. தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது.

2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கியிருக்கிறார்.

3. ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்துவதில்லை- அடங்கி அரவணைத்துச் செல்வது என்பதை பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜக உணரத் தொடங்கியிருக்கும்; தாங்கள் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கும்.

4. இனி பாஜக அசைக்கவே முடியாத சக்தி என்று ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.

5. ஜனநாயகத்தில் மக்களே அதிகாரம்மிக்கவர்கள்; தனிமனிதர்களோ அல்லது ஒரு இயக்கமோ மக்களைவிட அதிகாரம் கொண்டது இல்லை என்பதை இந்தத் தலைமுறைக்கு 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது.

ஒருவேளை தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும். மேலே சொன்னது எதுவுமே நடக்காமல் போயிருக்கலாம்...

தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது; மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது...

அதனால்தான் இதன் பெயர் 'நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது'

இவ்வாறு தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார்.


Tags:    

Similar News