கியாஸ் சிலிண்டர் வெடித்து முன்னாள் பெண் கவுன்சிலர் பலி
- வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
- தீயணைப்பு நிலையத்திற்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மனைவி மகாராணி(வயது 65). முன்னாள் கவுன்சிலரான இவர் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டில் மகாராணி தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. தூங்கி கொண்டிருந்த மகாராணி இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். மேலும் இந்த சிலிண்டர் வெடிப்பால் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
இதுதொடர்பாக திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனடியாக நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தகவல் அறிந்து வந்த திசையன்விளை போலீசார், மகாராணி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
உயிரிழந்த மகாராணிக்கு கணவர், 4 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர். இதில் நந்தகோபாலுடன் ஒரு மகன் மற்றும் மகள் சுப்பிரமணியபுரத்தில் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர்.