தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: நெல்லை உதவி கமிஷனர்- 3 காவலர்கள் சஸ்பெண்டு

Published On 2022-10-21 07:42 GMT   |   Update On 2022-10-21 07:42 GMT
  • ஆணையத்தின் பரிந்துரையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
  • முதற்கட்டமாக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது புதுக்கோட்டை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய திருமலை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை:

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் நியமித்து அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையம் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சம்பவம் நடந்த போது பணியில் இருந்த கலெக்டர் மற்றும் வருவாய் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தது.

இதைத்தொடர்ந்து ஆணையத்தின் அறிக்கை கடந்த 18-ந்தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் வரம்பு மீறி சில இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்பட்டிருந்தது.

மேலும் இதுதொடர்பாக அப்போதைய ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி. கபில் குமார் சரத்கார், தூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரன், டி.எஸ்.பி. லிங்க திருமாறன், இன்ஸ்பெக்டர் திருமலை உள்பட 17 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது.

மேலும் அப்போதைய கலெக்டர் வெங்கடேஷ் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் என மொத்தம் 21 பேர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

ஆணையத்தின் பரிந்துரையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது புதுக்கோட்டை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய திருமலை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் நிலையில், அவர் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

இதே போல துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பணியில் இருந்த முதல்நிலை காவலர் சுடலைக்கண்ணு, கலெக்டர் அலுவலகம் உள்ளே பணியில் இருந்த சங்கர், சதீஸ் ஆகிய 3 காவலர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 3 பேரும் நெல்லை மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்த நிலையில் அவர்கள் மீது முதற்கட்டமாக சஸ்பெண்டு நடவடிக்கை பாய்ந்துள்ளது.

Tags:    

Similar News