ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை?
- மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்கத்தை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு இந்தியா ஒன் என்ற தனியார் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தை சுற்று வட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ஆலம்பட்டியை சேர்ந்த சிலர் ஏ.டி.எம். மையம் உள்ள பகுதிக்கு சென்றபோது ஏ.டி.எம். எந்திரம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே திருமங்கலம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்கத்தை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இதில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? அல்லது பணம் உள்ள பெட்டியை திறக்க முடியாமல் கொள்ளை திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றார்களா? என தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து ஏ.டி.எம். மைய நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப பணியாளர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை திறந்த பின்பு தான் பணம் கொள்ளை போனது குறித்து தெரியவரும். இதற்கிடையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் கைப்பற்றினர். அதை ஆய்வு செய்த பின்பு தான் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தெரியவரும்.
இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.