ஏ.டி.எம். உடைத்து கொள்ளை முயற்சி- எச்சரிக்கை மணி ஒலித்ததால் வாலிபர் கைது
- வங்கி அதிகாரிகள் திருப்பத்தூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- நள்ளிரவில் ஏ.டி.எம். உடைத்து பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் ரெயில் நிலைய சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இங்கு மக்கள் அவ்வப்போது பணம் எடுப்பதோடு, டெப்பாசிட் செய்கின்றனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை அருகே உள்ள சோமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சக்திவேல் (வயது 24) நேற்று நள்ளிரவு காட்பாடியில் இருந்து ரெயிலில் திருப்பத்தூருக்கு வந்தார். ஏ.டி.எம். மையத்தில் புகுந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கினார்.
மேலும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருடினார். அப்போது ஹைதராபாத்தில் உள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் திருப்பத்தூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் ரோந்து பணியில் இருந்த போலீசார் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது எந்திரத்தை உடைத்து பணம் திருடி கொண்டிருந்த சக்திவேலை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
நள்ளிரவில் ஏ.டி.எம். உடைத்து பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.