தமிழ்நாடு (Tamil Nadu)

திருப்பூர் அருகே ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளை

Published On 2023-05-27 07:01 GMT   |   Update On 2023-05-27 07:01 GMT
  • சேலத்தில் இருந்து குப்புச்சாமி பணத்தை பையில் வைத்து கொண்டு வருவதை நோட்டமிட்டு அதே பஸ்சில் 3பேரும் ஏறியுள்ளனர்.
  • நேற்று மதியம் 4மணி அளவில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு இரவு 7மணிக்கு கொள்ளை கும்பலை பிடித்துள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி . இவர் சேலத்தில் நகைகளை அடகு வைத்து விட்டு ரூ.1.50 லட்சத்தை பையில் வைத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டார். சேலத்தில் இருந்து திருப்பூர் செல்லும் பஸ்சில் ஏறினார். மண்ணரை வந்ததும் பஸ்சில் இருந்து இறங்கிய போது , ரூ.1.50 லட்சம் பணம் வைத்திருந்த கைப்பையை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே இது குறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, இன்ஸ்பெக்டர் ராஜ சேகரன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் , போலீஸ்காரர்கள் சரவணன், பாஸ்கர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசார் குப்புசாமியிடம் பணத்தை கொள்ளையடித்த நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வந்தனர். அப்போது குப்புச்சாமி வந்த பஸ், எந்தெந்த பஸ் நிறுத்தத்தில் நின்றது, அங்கு இறங்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். பஸ் நிறுத்தம் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது மண்ணரைக்கு முன்பாக கருமாரம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் 2 பெண், ஒரு ஆண் ஆகியோர் இறங்கியதும் அவர்கள் பஸ் நிறுத்தத்தில் இருந்து தெரு வழியாக சென்றதுடன், பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறி திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதிக்கு வந்திறங்கியதும் தெரியவந்தது. அங்கிருந்து வீரபாண்டி கிருஷ்ணாநகருக்கு மற்றொரு ஆட்டோவில் ஏறி சென்றதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று 3பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் பெங்களூரை சேர்ந்த வாணி, வைதேகி மற்றும் சாய் என்பதும், திருப்பூர் வீரபாண்டி பகுதியில் தங்கியிருந்து பிச்சை எடுப்பது போல் நடித்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஓடும் பஸ்சில் பயணிகளிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.

சேலத்தில் இருந்து குப்புச்சாமி பணத்தை பையில் வைத்து கொண்டு வருவதை நோட்டமிட்டு அதே பஸ்சில் 3பேரும் ஏறியுள்ளனர். அப்போது குப்புச்சாமி அருகே நின்று கொண்டு இடிப்பதாக கூறி குப்புச்சாமியிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் அவரை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்துள்ளனர். தற்போது போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டனர். 3பேரிடம் இருந்து ரூ.60 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நேற்று மதியம் 4மணி அளவில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு இரவு 7மணிக்கு கொள்ளை கும்பலை பிடித்துள்ளனர். 3 மணி நேரத்தில் பிடித்த தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

Tags:    

Similar News