தமிழ்நாடு (Tamil Nadu)

தக்காளி விலை உயர்வு எதிரொலி... பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு

Published On 2024-10-09 02:52 GMT   |   Update On 2024-10-09 02:52 GMT
  • வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை:

தக்காளி விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்ட தக்காளி, கடந்த சில நாட்களில் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை அதிகரித்து விற்பனையானது.

இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. மொத்த மார்க்கெட்டில் இந்த விலை என்றால், வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெங்காயம் விலையும் உயர்ந்துள்ளது.

தற்போது ஆந்திரா, கர்நாடகாவில் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் வரத்து வெகுவாக குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வெங்காயம், தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில், அவற்றை மகாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்து பண்ணை பசுமை கடைகளில் தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறது.

கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.55 வரை, தக்காளி ரூ,60 வரை விற்பனையாகும் நிலையில், இங்கு வெங்காயம் கிலோ ரூ,40-க்கும், தக்காளி கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News