கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
- பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளதால் பொதுமக்கள் சுற்றுலா செல்வதை ஒத்திவைத்துள்ளனர்.
- வனப்பகுதியில் உள்ள பில்லர்ராக், பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக கடும் உறை பனி ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்து வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை இருந்தது. தற்போது மேலும் உறை பனி ஏற்பட்டு நட்சத்திர ஏரி, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி பரவியுள்ளது.
வயல்வெளிகளில் வெள்ளைப்போர்வை போர்த்தியது போல் எங்குபார்த்தாலும் பனித்துளிகள் காணப்படுகிறது. காலை 9 மணி வரை ஏற்பட்டுள்ள உறை பனியால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.
மேலும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளதால் பொதுமக்கள் சுற்றுலா செல்வதை ஒத்திவைத்துள்ளனர். இதனால் வனப்பகுதியில் உள்ள பில்லர்ராக், பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. மேலும் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட நகர் பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களிலும் பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
கோடை காலம் மார்ச் இறுதியில் தொடங்கும். மேலும் முழு ஆண்டு விடுமுறையும் தொடங்கும் என்பதால் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.