மிச்சாங் புயல் நிவாரணமாக ரூ.3 கோடியை வழங்கியது டி.வி.எஸ். நிறுவனம்
- முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
- டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து காசோலையை வழங்கினார்.
சென்னை:
பேரிடர் பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்கு உதவியாக நல்லுள்ளங்கள் பலர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்குகின்றனர். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரில் இருந்து மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட வேண்டியது அவசியமாகிறது.
எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, மிச்சாங் புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு டி.வி.எஸ். நிறுவனம் ரூ.3 கோடி வழங்கியுள்ளது.
டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து காசோலையை வழங்கினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார்.