தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு ஜாமின்: சாட்சிகளை கலைக்க முயற்சிக்க கூடாது- வானதி சீனிவாசன்

Published On 2024-09-26 06:59 GMT   |   Update On 2024-09-26 06:59 GMT
  • செந்தில் பாலாஜி, மாநில அரசின் ஆதரவை பெற்ற அதிகாரமிக்க அமைச்சராக இருந்தவர்.
  • சமூக ஊடகங்களில் போடப்படுகின்ற சிறு கருத்துக்கு கூட இந்த அரசு அதீத நடவடிக்கைகளை எடுக்கிறது.

கோவை:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கியிருப்பது குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள நபர்கள் அனைவரும் வழக்கு விசாரணையை விரைந்து நடத்துவதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் சாட்சிகளை அவர்கள் மிரட்டுவது என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போது இருக்கக்கூடிய தி.மு.க. அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களை எப்போதும் நியாயமான விசாரணைக்கு அனுமதிப்பது இல்லை. இது அவர்களுடைய வரலாறு.

தி.மு.க. அரசு இன்று அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப்போகாமல் குறிப்பாக குற்றச்சாட்டு கொடுத்திருப்பவர்களை மிரட்டுவதோ, வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபடவோ கூடாது என்பது எங்களின் எண்ணம்.

செந்தில் பாலாஜி மீது என்னென்ன ஊழல் வழக்குகள் உள்ளன என்பதை வேறு யாரோ சொல்லவில்லை. அவரே வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை முதலமைச்சர் மறந்திருக்கலாம். ஆனால் மக்கள் மறக்கமாட்டார்கள். இது ஆயிரக்கணக்கானோர் சம்பந்தப்பட்ட வழக்கு. நீதிமன்றமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு இந்த அரசு செயல்பட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

செந்தில் பாலாஜி, மாநில அரசின் ஆதரவை பெற்ற அதிகாரமிக்க அமைச்சராக இருந்தவர். இவர் உள்ளேயே இருந்தால் கூட வெளியில் அரசியல் நடத்தியவர் என ஊடகங்கள் சொன்னதை நாங்கள் பார்த்திருக்கிறோம். மீண்டும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், செல்வாக்கு மிக்க பதவிக்கு வந்தால் நிச்சயமாக அது சாட்சிகளை பாதிக்கும். எனவே முதலமைச்சர் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த அரசு ஊழலுடன் சமரசம் செய்து கொள்ளாது என எப்படி முதலமைச்சர் பேசிக் கொண்டு இருக்கிறாரோ அதனை செயலிலும் காட்ட வேண்டும்.

சமூக ஊடகங்களில் போடப்படுகின்ற சிறு கருத்துக்கு கூட இந்த அரசு அதீத நடவடிக்கைகளை எடுக்கிறது. கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிற தி.மு.க. அரசுக்கு அவர்கள் மீதே நம்பிக்கை இல்லை. சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகளை போட்டு தி.மு.க. அரசு துஷ்பிரயோகம் செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News