தமிழ்நாடு

வாரணாசியில் வசிக்கும் தமிழர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு- வானதி சீனிவாசன்

Published On 2024-05-29 06:55 GMT   |   Update On 2024-05-29 06:55 GMT
  • பிரதமர் மோடி 3-வது முறையாக களம் இறங்கியுள்ள வாரணாசி தொகுதியிலும் 1-ந்தேதி தான் தேர்தல் நடக்க உள்ளது.
  • மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, டெல்லி, மத்திய பிரதேசம், பஞ்சாப், சண்டிகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன்.

கோவை:

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? இந்தியாவை அடுத்து ஆளப்போகும் கட்சி எது என்பதை அறியும் 18-வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது.

கடந்த 19-ந்தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்டங்கள் முடிந்து விட்டன. பாராளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வருகிற 1-ந்தேதி நடக்கிறது.

இதனையொட்டி இறுதி கட்ட தேர்தல் நடக்க உள்ள இடங்களில் நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இதனையொட்டி அங்கு இறுதிகட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் தலைவர்கள், வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி 3-வது முறையாக களம் இறங்கியுள்ள வாரணாசி தொகுதியிலும் 1-ந்தேதி தான் தேர்தல் நடக்க உள்ளது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தி பிரசாரம் மேற்கொண்டார். மகளிர் அணி சார்பில் பிரமாண்ட மாநாடும் நடத்தப்பட்டது.

பிரதமருக்கு ஆதரவாக மத்திய, மாநில மந்திரிகள், கட்சியினரும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இருந்தும் பா.ஜ.க நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பலரும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாரணாசி மட்டுமின்றி வடமாநிலங்கள் முழுவதும் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், மகளிர் அணியினர், பா.ஜ.க தொண்டர்கள் அனைவரும் முகாமிட்டு, ஒவ்வொரு கிராமம், கிராமமாக சென்று பா.ஜ.கவுக்கு ஆதரவு திரட்டினர். வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பா.ஜ.கவுக்கு ஆதரவான அலைவீசுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் மாலைமலர் நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.


அப்போது நாம் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: வாரணாசி தொகுதி கள நிலவரம் எப்படி உள்ளது?

பதில்: வாரணாசி தொகுதியின் களநிலவரம் நன்றாகவே உள்ளது. இங்கு பாரதிய ஜனதாவுக்கான ஆதரவு அலை அதிகமாக உள்ளது. பிரதமர் மோடியின் மீது அங்குள்ள மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். எல்லோருமே பிரதமருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இங்கு பிரதமர் இந்த முறை சாதனை வெற்றியை பதிவு செய்வார்.

கேள்வி: வாரணாசி தொகுதியில் உள்ள தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்?

பதில்: வாரணாசியில் தமிழர்கள் அதிகம் பேர் உள்ளனர். குறிப்பாக பண்டிட்கள், பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்கள் இங்கு உள்ளனர். 150 வருடத்திற்கும் மேலாக பாரம்பரியமாகவே இங்கும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பிரதமர் மோடி மீது இங்கு வாழ்ந்து வரக்கூடிய தமிழ் மக்கள் அனைவரும் மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கான ஆதரவே காணப்படுகிறது. அனைவரும் பா.ஜ.க.வுக்கே எங்கள் ஆதரவு என்று சொல்லி வருகிறார்கள்.

கேள்வி: நீங்கள் வாரணாசியில் எத்தனை நாள் பிரசாரம் மேற்கொண்டீர்கள்?

பதில்: வாரணாசியில் நான் கடந்த 25 மற்றும் 26-ந் தேதிகளில் பிரசாரம் மேற்கொண்டேன். வாரணாசி தெற்கு, வாரணாசி வடக்கு உள்பட வாரணாசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டேன். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பா.ஜ.கவுக்கான ஆதரவு அலையே காணப்பட்டது.

இதுதவிர மகளிர் அணி சார்பில் தனியாக மாபெரும் மாநாட்டையும் நடத்தினோம். அந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமைந்தது.

கேள்வி: வேறு எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் நீங்கள் பிரசாரம் மேற்கொண்டீர்கள்? அங்கு பா.ஜ.கவுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்: மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, டெல்லி, மத்திய பிரதேசம், பஞ்சாப், சண்டிகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன். இன்று இமாச்சல் பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன். நான் பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் மக்களிடம் பா.ஜ.கவுக்கு மகத்தான ஆதரவு உள்ளது. மக்கள் அனைவரும் பா.ஜ.க ஆட்சியை விரும்புகிறார்கள்.

கேள்வி: தமிழ்நாட்டில் இருந்து வேறு தலைவர்கள் யாராவது வாரணாசி பிரசாரத்துக்கு வந்துள்ளனரா?

தமிழகத்தில் இருந்து பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலர் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களை நேரில் சந்தித்து பிரதமருக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள். தற்போது பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து பிரதமருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

கேள்வி: மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்வது குறித்து?

பதில்: ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் எப்போதும் பிரதமர் ஒரு இடத்திற்கு சென்று தியானம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் தமிழகத்திற்கு வருகிறார். பிரதமர் தமிழகத்திற்கு வருவது சந்தோஷம். அதுவும் விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்வது சிறப்பு வாய்ந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News