தமிழ்நாடு

தண்ணீர் வரத்து அதிகரிப்பால் 46 அடியாக உயர்வு- வீராணம் ஏரி 4 நாளில் முழுகொள்ளளவை எட்டும்

Published On 2024-06-14 05:00 GMT   |   Update On 2024-06-14 05:00 GMT
  • கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டது.
  • வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 62 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

காட்டுமன்னார் கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும்.

இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 கன அடி ஆகும். ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் வீராண ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப இங்கிருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டது.

இந்த நிலையில் கீழணையில் இருந்து கடந்த 25-ந்தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

இன்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்தது. ஏரிக்கு வினாடிக்கு 110 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 62 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் 4 நாளில் ஏரி முழு கொள்ளளவை எட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News