தமிழ்நாடு (Tamil Nadu)

திருநின்றவூர் நெடுஞ்சாலையை துண்டித்து வெள்ளநீர் வெளியேற்றம்

Published On 2023-12-12 08:14 GMT   |   Update On 2023-12-12 08:14 GMT
  • சில இடங்களில் தண்ணீர் வடியாமல் வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது.
  • பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

திருவள்ளூர்:

மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. எனினும் இன்னும் சில இடங்களில் வீடுகளை சூழ்ந்து வெள்ள நீர் வடியாமல் உள்ளது. வெள்ளவேடு அருகே உள்ள புதுச்சத்திரம் அடுத்த கொட்டம்பேடு, வேப்பம்பட்டு, பெருமாள் பட்டு, திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களில் சில இடங்களில் தண்ணீர் வடியாமல் வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கொட்டம்பேடு பகுதியில் மழை வெள்ள நீரை வெளியேற்ற புதுச்சத்திரம்- திருநின்றவூர் நெடுஞ்சாலையை துண்டித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் அருகில் உள்ள கூவம் ஆற்றில் கலக்கும் வகையில் வெளியேற்றப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக புதுச்சத்திரத்தில் இருந்து கொசவன்பாளையம், கொட்டம்பேடு, திருநின்றவூர், தாமரைப்பாக்கம் கூட்டுசாலை, புதுவாயல் கூட்டு சாலை வழியாக கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு உள்ளன.

புதுச்சத்திரத்தில் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர். இதேபோல் திருநின்றவூரில் இருந்து புதுச்சத்திரம் வரும் வாகனங்கள் திருவள்ளுவர் வந்து செல்கின்றன. இதனால் வாகனங்கள் சுமார் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News