மலைப்பாம்பை கயிற்றால் கட்டிபோட்ட கிராமமக்கள்
- கிராம மக்கள் பாம்பை பிடிக்க முயன்றனர்.
- வன துறையினர் கயிற்றால் கட்டி வைத்திருந்த மலைப்பாம்பை மீட்டனர்.
ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டு கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடியிருப்புக்குள் சுமார் 12 நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உணவு தேடி வந்தது.
இதனைக் கண்ட குடியிருப்பு வாசிகள் மலைப்பாம்பை பார்த்து கத்தி கூச்சலிட்டனர். மேலும் கிராம மக்கள் பாம்பை பிடிக்க முயன்றனர். பாம்பு சீரியதால் அனைவரும் பயந்து ஓடினர். இதனையடுத்து மாட்டின் கயிற்றை சிலர் எடுத்து வந்தனர்.
பின்னர் பாம்பு எங்கும் செல்லாதவாறு தலை பகுதியில் கயிற்றால் சுருக்கு முடி போட்டு கட்டி வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒடுகத்தூர் வன துறையினர் கயிற்றால் கட்டி வைத்திருந்த மலைப்பாம்பை மீட்டனர்.
இதனையடுத்து மலைப்பாம்பை வனத்துறையினர் அருகே உள்ள பரவமலை காப்பு காட்டில் பத்திரமாக கொண்டு போய் விட்டனர்.
மேலும் வனத்துறையினர் கிராம மக்களிடம் பாம்புகளை இதுபோன்று கயிற்றால் கட்டக் கூடாது என்று அறிவுறுத்தி சென்றனர்.
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பை கிராம மக்கள் கயிற்றால் கட்டி வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.