தமிழ்நாடு

ஷவர்மா விற்ற கடையில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.


வாலிபருக்கு வாந்தி மயக்கம்: ஷவர்மா விற்ற கடை மூடல்

Published On 2022-08-01 07:19 GMT   |   Update On 2022-08-01 09:42 GMT
  • கோவை மாவட்டம் அன்னூரில் சத்தியமங்கலம் சாலையில் கடை நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ்.
  • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை:

கோவை மாவட்டம் அன்னூரில் சத்தியமங்கலம் சாலையில் கடை நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ்(வயது28).

இவர் நேற்றுமுன்தினம் மாலை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள ஷவர்மா கடையில் ஆன்லைன் மூலம் ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.

அதனை ஆண்ட்ரூஸ் சாப்பிட்ட போது ஒவ்வாமையால், அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பின்னர் ஷவர்மாவை நுகர்ந்து பார்த்த போது அதில் கெட்டுப்போன வாசம் வந்தது. இதனால் அவதிக்குள்ளான அவர், இதுகுறித்து நண்பர்களிடம் தெரிவித்தார்.

பின்னர் நண்பர்களுடன், தான் ஷவர்மா ஆர்டர் செய்த கடைக்கு சென்று, இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும் ஆண்ட்ரூசுடன் கடையில் இருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அந்த கடையில் சாப்பிட்டிருந்தவர்கள் ஒன்று கூடவே பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த தகவல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தெரியவந்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு காலாவதியான மசாலா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள், கடை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக தெரிவித்து, கடையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர்.

தொடர்ந்து அன்னூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள இறைச்சி கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்தவர்களிடம் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி மற்றும் உணவு பண்டங்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தனர்.

Tags:    

Similar News