மணிப்பூர் விவகாரத்தில் குஷ்பு மவுனமாக இருப்பது ஏன்?- அமைச்சர் கீதாஜீவன் கேள்வி
- தி.மு.க.வினர் நேரடியாக களத்திற்கு சென்று மக்களுக்கு உண்டான பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டு வருகிறோம்.
- ஒரு ராணுவ வீரரின் மனைவிக்கு பாதுகாப்பு இல்லை என்று நிலைமை மணிப்பூர் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள தனியார் திருமண மகாலில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்கள் மூலமாக அவதூறு கருத்துக்களை பரப்பியே பின்பு மக்களை சந்திக்கின்றனர். ஆனால் தி.மு.க.வினர் நேரடியாக களத்திற்கு சென்று மக்களுக்கு உண்டான பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டு வருகிறோம்.
மேலும் மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தின் போது பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் நடிகை குஷ்பு ஏன் இது குறித்து பேசவில்லை. கிளிசரின் போட்டு மீடியாக்கள் முன் அழும் அவர் வாய் திறக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் ஏன் மவுனமாக இருக்கிறார்?
இணையதள சேவையை முடக்கி, தேவாலயங்களை எரித்து மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபட்டதே பா.ஜ.க. அரசுதான். ஒரு ராணுவ வீரரின் மனைவிக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலைமை மணிப்பூர் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.