மகளிர் உரிமைத்தொகையின் நோக்கம் நிறைவேறிவிட்டது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு கிடைத்து கொண்டிருக்கிறது.
- உங்களின் அன்றாட செலவுக்கும், அவசிய தேவைக்கும் இந்த தொகையானது பயன்பட்டு வருகின்றது
கோவை:
தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாள் அன்று கலைஞர் மகளிரி உரிமை தொகை திட்டத்தை தொடங்கியது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள மகளிருக்கு, மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது மகளிருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகையும் தற்போது வரவு வைக்கப்பட்டு விட்டது. இதனைதொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு முதலமைச்சர் பேசும் வீடியோ வந்துள்ளது.
அந்த வீடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு கிடைத்து கொண்டிருக்கிறது. இதுவரை 6 ஆயிரம் ரூபாய், உங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கும்.
எந்தவித தடங்கலும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை நான் உங்களுக்கு வழங்கி கொண்டிருப்பேன். இது உங்கள் வாழ்நாள் முழுவதும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.
உங்களின் அன்றாட செலவுக்கும், அவசிய தேவைக்கும் இந்த தொகையானது பயன்பட்டு வருகின்றது என்பது எனக்கு நன்கு தெரியும்.
அப்படி பயன்பட்டு வரும் இந்த தொகையிலும், சில தாய்மார்கள் குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் சேமித்து வைப்பதாக தெரிகிறது. இது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது.
எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டதோ அது நிறைவேறி விட்டது என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய அருமை தாய்மார்களே உங்களுக்கு உதவ, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்றுமே நான் இருப்பேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.