திட்டமிட்ட தேதியில் தவெக மாநாடு- புஸ்சி ஆனந்த்
- விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.
- விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னை:
விஜய்யின் தமிழக வெற்றிக்கழக முதல் அரசியல் மாநாடு வருகிற 23-ந் தேதி விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநாடு நடத்துவதற்கு சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுக்காக பிரமாண்ட மேடை, உணவுக்கூடம், ஆம்புலன்ஸ் வசதி, கழிப்பிடம், குடிநீர் வசதிகள், 40 ஏக்கரில் ஒரு வாகன நிறுத்தமும் 27 ஏக்கரில் இன்னொரு வாகன நிறுத்தமும் என 2 வாகன நிறுத்தம் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் மாநாட்டுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது.
மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதி கேட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 28-ந்தேதி கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மனு கொடுத்தார்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் செப்டம்பர் 23-ந்தேதி திட்டமிட்டபடி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் என்று பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம் மாநாடு குறித்து 21 கேள்விகளை விக்கிரவாண்டி காவல்துறை கேட்டிருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சட்டப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.