தென் சென்னைக்கு உட்பட்ட 13வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்: தமிழிசை
- சோழிங்கநல்லூர் தொகுதியில் சில இடங்களில் கொத்து கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
- வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் 49 ஏ படிவத்தில் டெண்டர் ஓட்டு செலுத்த முடியும்.
சென்னை:
தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று அந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி அமீத்தை சந்தித்தார்.
அப்போது மயிலாப்பூர் 122-வது வட்டம் 13-வது வாக்குச்சாவடியில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் மனு கொடுத்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். நேர்மையானவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். ஆனால் தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் தோல்வி பயம் வருகிறதோ அப்போதெல்லாம் மாற்றுப் பாதையை தேர்வு செய்வதுதான் வாடிக்கை.
நேற்று வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 122-வது வார்டில் ஆஸ்டின் நகரில் அமைக்கப்பட்டிருந்த 13-வது வாக்குச்சாவடியில் மாலை 5.30 மணியளவில் பிரபு, அருண் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உள்ளே புகுந்து பா.ஜனதா பூத் ஏஜெண்டு கோவிந்தன் உள்ளிட்டோரை அடித்து வெளியே விரட்டி விட்டு பூத்தை கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டுள்ளார்கள்.
இதே கும்பல் பூத் எண். 14, 15, 16 ஆகியவற்றிலும் காலையில் இருந்தே கள்ள ஓட்டுகளை பதிவு செய்து அராஜகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக எங்கள் தலைமை தேர்தல் ஏஜெண்டு கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் அதிகாரிகள் கவனத்துக்கும் எடுத்து சென்றிருக்கிறார்கள்.
எனவே இந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம்.
சோழிங்கநல்லூர் தொகுதியில் சில இடங்களில் கொத்து கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. தி.நகரில் வார்டு எண்கள் 199, 200, 201, 202-ல் ஆயிரக்கணக்கானவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
தி.மு.க.வினர் செய்த தவறுகளை மறைப்பதற்காக பா.ஜனதாவினர் தோல்வி பயத்தில் புகார் கூறுவதாகவும், பா.ஜனதாவினர் பெயர்களை நீக்கி விட்டதாக கூறுவதாகவும் கூறுகிறார்கள். அப்படியென்றால் திட்டமிட்டுதான் பா.ஜனதாவினர் பெயர்கள் நீக்கப்பட்டது என்று தி.மு.க. ஒத்துக்கொள்கிறதா?
கணவருக்கும், மனைவிக்கும் வெவ்வேறு இடங்களில் ஓட்டு இருப்பது, ஒரே குடும்பத்தில் சிலருக்கு ஓட்டு இல்லாமல் இருப்பது, இப்படி சில குறைபாடுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவு சதவீதம் குறைவு என்பது கவலை அளிக்கும் விசயம்.
வாக்கு வலிமையானது. அதை செலுத்த முடியாமல் போவது அதிக வலியை தரும். வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் 49 ஏ படிவத்தில் டெண்டர் ஓட்டு செலுத்த முடியும். இது பலருக்கு தெரியவில்லை. தேர்தல் விழிப்புணர்வுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. ஆனாலும் எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை.
சென்னையில் 69 சதவீதம் ஓட்டுப்பதிவாகி இருந்ததாக நேற்று இரவு தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இன்று 10 சத வீதத்துக்கும் மேல் குறைத்து தெரிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சதவீத முரண்பாடு தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையின் மையை ஏற்படுத்தி விடும்.
எப்படியோ மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை இவ்வளவு பெரிய மாநிலத்தில் சுமூகமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளை சேர்ந்தவர்கள் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். பாரதிய ஜனதா சார்பில் உதவி தேர்தல் அலுவலர் கீதா லட்சுமியிடம் அளிக்கப்பட்ட புகாரில் பா.ஜனதா முகவர் கவுதமை தாக்கிய தி.மு.க. பிரமுகர்களான பிரபு, அருண் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தி.மு.க. முகவரான கிருஷ்ணவேணி தேனாம்பேட்டை போலீசில் அளித்த புகாரில், பாரதிய ஜனதா கட்சி முகவர்களை கவுதம், கிருஷ்ணன் ஆகியோர் சாதியை பற்றி குறிப்பிட்டு அவதூறாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.