தென் சென்னைக்கு தனி தேர்தல் அறிக்கை: தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
- தென்சென்னை தொகுதியில் ஒரு வேட்பாளராக இல்லாமல், ஒரு வாக்காளராக களம் காண இருக்கிறேன்.
- தென்சென்னையில் நிலவும் பிரச்சனைகள் குறித்து நான் அறிவேன்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில், தென்சென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளராக, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் களம் காண்கிறார்.
இந்த நிலையில், அவர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார். அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில், அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது, தமிழக பா.ஜனதா துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்பட பலர் இருந்தனர்.
பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்சென்னை தொகுதியில் ஒரு வேட்பாளராக இல்லாமல், ஒரு வாக்காளராக களம் காண இருக்கிறேன். இதனால், தென்சென்னையில் நிலவும் பிரச்சனைகள் குறித்து நான் அறிவேன். இதற்காக, தென்சென்னைக்கு என தனி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதை, விரைவில் வெளியிடுவேன்.
என்னுடைய வயதிற்கு நான் இன்னும் 3 முறை கூட கவர்னராக பதவி வகிக்க முடியும். ஆனால், மக்கள் பணியாற்றவே விரும்புகிறேன். அப்படி என்றால், கவர்னராக இருக்கும்போது மக்கள் பணியாற்றவில்லை என்று கேட்கலாம். கவர்னராக இருந்தால் நேரடியாக மக்கள் பணியாற்ற முடியாது.
த.மா.கா. அலுவலகத்திற்கு வரும்போது என்னுடைய வீட்டிற்கு வருவதுபோல் உணர்கிறேன். சிறுவயதில் மூப்பனார் உள்பட மூத்த தலைவர்களை சந்தித்துள்ளேன். தேர்தலில் கடுமையான உழைப்பால் நிச்சயம் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.