தமிழ்நாடு

போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் பேரிகார்டு கொண்டு தடுத்து நிறுத்திய காட்சி.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published On 2022-12-21 08:08 GMT   |   Update On 2022-12-21 08:08 GMT
  • தடையை மீறி தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்குள் கோஷங்கள் எழுப்பியவாறு விவசாயிகள் நுழைய முயன்றனர்.
  • போராட்டத்தில் ஈடுப்பட்ட 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகைகள் அனைத்தும் வட்டியுடன் வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடனில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு கரும்பு விவசாய சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் சாமி நடராஜன், சின்னத்துரை எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது தடையை மீறி கலெக்டர் அலுவலகத்துக்குள் கோஷங்கள் எழுப்பியவாறு நுழைய முயன்றனர். இதனை அடுத்து பாதுகாப்பில் இருந்த போலீசார் பேரிகார்டு கொண்டு அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்தாலும் சில விவசாயிகள் நுழைய முயன்ற போது அவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.

தொடர்ந்து விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்ட 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News