உளுந்தூர்பேட்டை அருகே குழந்தை பாக்கியம் கேட்டு மடிச்சோறு வாங்கி சாப்பிட்ட பெண்கள்
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் கிராமத்தில் உள்ள மருதாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவில் உள்ளது.
- சிவபெருமான் வேடம் அணிந்தவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் கிராமத்தில் உள்ள மருதாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிறுதொண்டு நாயனாரின் அமுது படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவபெருமான் மாறுவேடமிட்ட கைலாய வாத்தியங்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலுக்கு சென்றார்.
அப்போது சிறுதொண்டர் நாயனார் குழந்தை வரம் வேண்டி சிவபெருமானிடம் வரம் கேட்ட பிறகு குழந்தை பிறந்தது. இதனை சிவபெருமானின் புராண வரலாற்று பாடல்கள் மூலம் எடுத்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இக்கோவிலில் விழா நடைபெறும். விழாவினை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதனையடுத்து சிவபெருமான் வேடம் அணிந்தவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஆயிரத்துக்கு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மண்டியிட்டு மடிச்சோறு வாங்கி வழிபாடு செய்தனர். இதனால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும், குடும்ப பிரச்னைகள் தீறும் என்பது ஐதீகமாகும்.
இவ்விழாவில் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.