பழவேற்காடு பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதியில் இரவு 9 மணி வரை மத்திய குழுவினர் ஆய்வு
- புழல், சோழவரம் ஏரிக்கரையில் ஏற்பட்ட சேதம், அதன் சீரமைப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர்.
- ஆய்வு செய்தபோது இரவு நேரம் ஆகிவிட்டதால் ஜெனரேட்டர் உதவியுடன் மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பொன்னேரி:
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பலத்த வெள்ள சேதம் ஏற்பட்டது. வெள்ளம்பாதித்த பகுதிகளை மத்தியகுழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பொன்னேரி வட்டத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவின் அதிகாரிகள் ஏ.கே. சிவ்ஹரே, விஜயகுமார், பவ்யா பாண்டே உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உடன் இருந்தார். புழல், சோழவரம் ஏரிக்கரையில் ஏற்பட்ட சேதம், அதன் சீரமைப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து இரவு 9 மணிவரை பழவேற்காடு பகுதியில் மத்திய குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தனர். தத்தைமஞ்சி கிராமத்தில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டபோது விவசாயிகள் தேங்கிய தண்ணீரால் நெற்பயிர் அழுகியது குறித்து பயிர்களை பிடுங்கி காண்பித்தனர். தொடர்ந்து தத்தைமஞ்சி பகுதியில் ஆரணியாற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பு குறித்தும் ஆய்வு செய்தனர். பழவேற்காடு பகுதியில் ஆய்வு செய்தபோது இரவு நேரம் ஆகிவிட்டதால் ஜெனரேட்டர் உதவியுடன் மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அப்போது சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் மதிவாணன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பாலசந்தர், பொதுப்பணித்துறை அதிகாரி வெற்றி வேலன் உடன் இருந்தனர்.