தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு- முதல்முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர்
- பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 6.3 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 3,32,000 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் உள்ளனர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.
18- 19 வயதுடைய வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர். 190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
15 கம்பெனி துணை ராணுவத்தினர் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சி-விஜில் செயலி மூலம் இதுவரை 4,861 புகார்கள் பெறப்பட்டுள்ளன. ரூ.173.58 கோடி பணம், ரூ.6.67 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர் அட்டை இல்லை என்றாலும் கூடுதலாக 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம். சுமார் ஒரு லட்சம் மாநில போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
44,801 வாக்குப்பதிவு மையங்களில் வெட் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் நடப்பவை அனைத்தும் கண்காணிக்கப்படும்.
மாற்று திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம், சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளன. இ.வி.எம்., விவிபேட் செயல்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் தெளிவாக விளக்கி உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.