தமிழ்நாடு

மேயர் குடும்பத்தினர் மீது கூறப்பட்ட புகார் குறித்து விசாரிக்க வேண்டும்- வானதி சீனிவாசன்

Published On 2023-08-29 09:52 GMT   |   Update On 2023-08-29 09:52 GMT
  • ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.
  • ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது.

கோவை:

கோவை பீளமேட்டில் நடந்த ஓணம் விழாவில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

அப்போது அவர் அங்குள்ள மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மலையாள சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். தமிழக முதலமைச்சர் கூட மலையாளத்தில் வாழ்த்து சொல்லி இருக்கிறார். அதுபோல, தீபாவளிக்கும் முதலமைச்சர் வாழ்த்து கூறினால் அவர் அனைவருக்குமான முதலமைச்சராக செயல்படுவார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும்.

ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.

கோவை மாநகராட்சி மேயர் மற்றும் குடும்பத்தினர் மீது இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசின் முதன்மையான பதவியில் இருப்பவரின் குடும்பத்தின் மீது இது போன்ற புகார்கள் வருகிறபோது, மாநில அரசு இதனை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வருகிற போது எல்லாம் மக்களை மிரட்டுவது, சட்டத்தை தங்களுக்கு சாதமாக மாற்றுவது சர்வசாதாரணமாகி விட்டது. கோவை மேயர் குடும்பத்தினர் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது. ஆதாரங்கள், சாட்சியங்கள் இருப்பதை வைத்து மத்திய அரசின் துறைகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு கட்சி பாகுபாடு பார்ப்பது கிடையாது. ஆதாரத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News