தமிழ்நாடு

'திடீர்' நெஞ்சு வலியால் துடித்த டிரைவர்- பயணிகளை பத்திரமாக இறக்கிய பின் உயிரைவிட்டார்

Published On 2023-09-19 08:30 GMT   |   Update On 2023-09-19 08:30 GMT
  • டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்தனர்.
  • மனைவி ராதாபுஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜபாளையம்:

நெல்லையில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவராக தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த பெத்தநாடார்பட்டி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கார்மேகம் (வயது 47) என்பவர் பணியில் இருந்தார். கண் டக்டராக வண்ணமுத்துக் குமரன் டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருந்தார்.

இந்த பேருந்து ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, டிரைவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே பஸ்சை ஓரங்கட்டி நிறுத்திய அவர் தொடர்ந்து இயக்க முடியாமல் தவித்தார். இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து கண்டக்டர் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். சற்று தெளிவான நிலையில் இருந்த டிரைவர் கார்மேகன் தொடர்ந்து பஸ்சை இயக்கியவாறு ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் வந்து சேர்ந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டிக்கெட் எடுத்திருந்த பயணிகள் மட்டும் வேறு பஸ்சில் ஏற்றிவிடப்பட்டனர்.

பின்னர் டிரைவர் கார் மேகத்தை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு கண்டக்டர் வண்ணமுத்துக்குமரன் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்து வந்தனர். இது பற்றிய தகவல் அவரது மனைவி ராதாபுஷ்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். இதற்கிடையே நேற்று இரவு சிகிச்சை பலனின்றி டிரைவர் கார் மேகம் பரிதாபமாக இறந் தார். உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தைரியமாக பஸ்சை ஓட்டி வந்து பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்ட டிரைவர் சிகிச்சையின்போது உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இறந்த டிரைவருக்கு கார்த்திக் என்ற மகனும், மோனிகா என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து டிரைவரின் மனைவி ராதாபுஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News