தமிழ்நாடு

கொடைக்கானல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2023-09-24 10:55 GMT   |   Update On 2023-09-24 10:55 GMT
  • கடந்த 5 நாட்களில் மட்டும் கொடைக்கானலில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
  • மலை சாலைகளில் திடீர் அருவிகளும் உருவாகி சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்கள் பெரும்பாலும் இயற்கை காட்சிகளாக இருந்து வரக்கூடிய நிலையில் இங்குள்ள மலைப்பகுதிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரும் அழகுதான். இதனை கண்டு ரசிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 1 வாரமாக கொடைக்கானலை சுற்றியுள்ள மேல்மலை மற்றும் கீழ் மலை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் கொடைக்கானலில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இது மட்டுமல்லாது கொடைக்கானலில் உள்ள பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கி உள்ளது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, புலவிச்சாறு அருவி, அஞ்சுவீடு அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதுமட்டுமின்றி மலை சாலைகளில் திடீர் அருவிகளும் உருவாகி சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறது. தொடர் மழையால் குளு குளு சீதோசனம் கொடைக்கானலில் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படகு சவாரி, சைக்கிள், குதிரை சவாரி செய்தும், மலை முகடுகளில் தவழ்ந்து செல்லும் மேக கூட்டங்களை பார்த்தும் உற்சாகம் அடைந்து வருகின்றனர். விட்டு விட்டு சாரல் மழை பெய்தாலும் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்து வருகின்னர். இதனால் அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. 

Tags:    

Similar News