தமிழ்நாடு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மலைவாழ் மக்கள்.

கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலையில் 3-வது நாளாக மலைவாழ் மக்கள் போராட்டம்

Published On 2023-07-14 04:59 GMT   |   Update On 2023-07-14 04:59 GMT
  • வன உரிமை சட்டப்படி வழங்கியுள்ள பட்டாவில் மக்களுக்கு பயன்படாத நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்.
  • பெட்டி, படுக்கை, சமையல் பொருட்களுடன் வந்த மலைவாழ் மக்கள் வன அலுவலர் அலுவலகம் முன்பு அண்டாவில் சமைத்து சாப்பிட்டனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை வன அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் இன்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பாதைக்கு செல்ல கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும், ஆறுகளை கடந்து செல்ல பாலம் கட்ட வேண்டும், குடிநீர், செல்போன் கோபுரம், சமுதாயக்கூடம், பள்ளி, அங்கன்வாடி, ரேஷன் கடை, மருத்துவமனை, வீடு, வேளாண்மை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

வன உரிமை சட்டப்படி வழங்கியுள்ள பட்டாவில் மக்களுக்கு பயன்படாத நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் உடுமலையில் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

பெட்டி, படுக்கை, சமையல் பொருட்களுடன் வந்த மலைவாழ் மக்கள் வன அலுவலர் அலுவலகம் முன்பு அண்டாவில் சமைத்து சாப்பிட்டனர். பின்னர் இரவு அங்கேயே படுத்து தூங்கினர். இன்று 3-வது நாளாக போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் முத்து கண்ணன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் செல்வம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மதுசூதனன், குமார், தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம், நகர செயலாளர் தண்டபாணி, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி பஞ்சலிங்கம் உட்பட மலைவாழ் மக்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.

இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மலைவாழ் மக்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். அதில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உடுமலையில் இருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு 500 பேர் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News