உடுமலையில் சாராயம் காய்ச்சி விற்றவர் மீது வழக்கு
- உடுமலை மாவடப்பு மலைக்கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலை:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). ஆனைமலை ஒன்றிய பா.ஜனதா செயலாளர். அதே ஊரை சேர்ந்தவர் மகேந்திரன்(40). கட்டிட தொழிலாளி. இவர்கள் 2 பேருக்கும் நேற்று முன்தினம் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், அதே ஊரை சேர்ந்த சிலருடன் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மாவடப்பு மலைக்கிராமத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி சாராயம் வாங்கி வந்து குடித்ததும், அவர்களை தவிர மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து நடந்த அடுத்தக்கட்ட விசாரணைக்கு பிறகு ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோருக்கு சாராயம் குடித்ததால் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், மதுவில் கொசு மருந்து கலந்த தண்ணீரை கலந்து குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும் அவர்களுக்கு சாராயம் விற்றது யார்? என்று ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உடுமலை மாவடப்பு மலைக்கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது. அவர் மீது ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.