மனைவி, குழந்தையை மீட்டுத் தரக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
- பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
- சம்பவத்தால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொது மக்கள் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வரக்கூடிய மக்களை முகப்பு பகுதியில் போலீசார் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். பின்னர் திடீரென்று இந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் பண்ருட்டி மருங்கூர் கிராமத்தை சேர்ந்த லிங்கமூர்த்தி (வயது 27) என்பதும், இவருடைய மனைவி மற்றும் 6 மாத குழந்தையை அவரது சகோதரர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் தெரியவந்தது. இவர்களை மீட்டு தர வலியுறுத்தி தீக்குளிக்க முயற்சித்தது போலீசாருக்கு தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வேண்டும், இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை செய்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.