தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் மழைநீர் தேங்குவதற்கான காரணம் என்ன? - பிரதீப் ஜான் விளக்கம்

Published On 2024-10-15 10:50 GMT   |   Update On 2024-10-15 10:50 GMT
  • சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும்.
  • 40 செ.மீ மழை பெய்தால் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம்.

வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் நாளை 'சிவப்பு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று கனமழையும் நாளை மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 8 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் அது கனமழையாக மாறியது. இதனால் சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் மழைநீர் தேங்குவதற்கு காரணம் என்ன என்று வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "சென்னையில் பெய்யும் மொத்த மழையும் எண்ணூர், நேப்பியார், அடையாறு, ஒக்கியம் வழியாக கோவளம் ஆகிய 4 வழிகளில் மட்டுமே வெளியேறுகிறது. சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும். 20 செ.மீ மழை பெய்தால் சென்னையில் ஒரு நாள் நீர் தேங்கும். 30 செ.மீ மழை பெய்தால் சென்னையின் பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்டிப்பாக மழைநீர் தேங்கும்.

40 செ.மீ மழை பெய்தால் சென்னையில் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம். மழைநீர் வடிகால் என்பது சாலைக்காக போடப்படுவது. 40 செ.மீ அளவுக்கு பெய்யும் மழைக்காக வடிகால் அமைக்க முடியாது. நம் பகுதியின் சூழலை புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News